நிறமிழந்த நட்பு..
தீர்ந்து விடாத
தனிமையின்
தேடல்கள் ...
எனக்குள்ளே
நீளும் உரையாடல்
நிலைகொல்லாத் தவிப்போடு
மேலும் கீழுமாய்
வலமும் இடமுமாய்
நினைவின் அலைகள்
அங்கும் இங்கும் பாய்கின்றன....
கரை படிந்து
சாயம் தோய்ந்த
எனது அறையின் சுவர்களே
என்றும்
உற்ற தோழனாய்
எதுவாகினும் சகித்துக் கொள்ளும்
என்னுயிர் நண்பனாய்...
சில நேரங்களில்
தாலாட்டும்
அன்னையாய்...
மறக்கடிக்கப்பட்ட சோகங்கள்
என் மனக்கதவை
மீண்டும் வருடும்போதும்
துக்கங்கள் தலைக்கேறி
என் உயிருக்கு
விடை கோரும்போதும்...
புயலடிக்கப் பட்ட
சுழலுக்குள் சிக்கி
மரணத்தின் விளிம்புகளை
கண்டு மீண்டெழுந்த மனிதனாய்...
கண்ணீர் கரைத்த
கண்களுக்கு
தண்டனையும் ஆறுதலும்
எதுவாயினும்
அவ்வப்போது உன்
சாயத்தை என்மீது பூசிக் கொள்கிறேன்
அதன் மீது
நான் கொண்ட நட்பால்
நிறமிழந்த
என் படுக்கையறை
சுவர்கள்!!!!!!!!
Comments
Post a Comment