கள்ளிப் பால் கரிக்குதடி...


அடியே ராசாத்தி 
ஒரு நிமிஷம் 
நின்னுதான் கேளேண்டி...

பாதி தூக்கத்துல 
மனசு படக்குதடி...

பள்ளிக் கூடம் போன புள்ள 
பாதி வழி திரும்பையில 
பாதம் நடுங்குச்சோ 
பாவாடை நனஞ்சிச்சோ 
அடுத்த அடி 
வைக்கையில அடிவயிறும் 
கலங்குச்சோ...

பாதியில குத்த வச்ச 
கண்ணிப் பெண்ணொருத்தி 
பள்ளிக் கூடம் போகையில 
ஒத்தப் பண மரத்தில் 
ஒனாங் கத்திச்சோ 
ஒதுங்கிப் போகையில 
மேகம் மரச்சிச்சோ 
வாய்காக் கரையோரம் 
காத்துக் கருப்படிச்சி 
கண்ட கனா பளிச்சிச்சோ...

போதுமடி உன் படிப்பு 
ஆத்தா சொல்லுராஹ 
மீறி நான் பேச 
வெளக்கமாறு எடுக்குராஹ...

பொட்டப்புள்ள 
நீயொருத்தி 
படிச்சென்ன லாபமின்னு 
வேலி போடுராஹ
வெறப்பா நிக்கிராஹ
வீம்பு நான் பிடிச்சா 
வெட்டருவா எடுககுராஹ...

விடிஞ்சா முதல் பஸ்ஸில் 
மாமங் காரன் வந்திடுவான் 
வாழையும் தோரணமும் 
வாசலில நிக்குதடி...

பாதி படிச்ச புள்ள 
கண்ட கனா 
கலஞ்சிடுச்சே மீதிப் 
படிக்க வைக்க 
மாமங் காரன் விடுவானோ 
இல்ல  
மாட்டுத் தொழுவம் கட்டி
அடுப்பங் கரை 
அடைப்பானோ...

போதுமடி எம்பொழப்பு 
நாய் படுமோ பேய் படுமோ 

கருத்தரிச்ச நாள் முதலா
கொட்டப் பாக்கிடிச்சி 
கள்ளிப் பாலைக் 
கையில் வச்சி 
காத்திருக்கா எங்கிழவி
காலம் கழிஞ்சிருச்சி
காத்தால பொறக்குறது 
 பாதகத்தி மவளோன்னு  
உசுரு உறையுதடி
உடம்பும் நடுங்குதடி!!!!!!!!! 

Comments